இறந்துவிட்டார் என 6ஆவது முறையாக வதந்தி : நலமுடன் இருக்கிறார் எஸ்.ஜானகி

 

சென்னை, ஜூன் 29:

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமுடன் இருப்பதாகவும் அவரின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவரின் மகன் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் மிக மூத்த பின்னணி பாடகியாக அறியப்படும் எஸ்.ஜானகி (வயது 82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அண்மையில், மைசூருக்கு உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றபோது அங்கு கால் இடறி கீழே விழுந்ததில் பாடகி ஜானகிக்கு இடுப்பில் முறிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவருக்கு கடந்த மே மாதம் அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பாடகி எஸ்.ஜானகி உடல்நலக் குறைவால் மரணமடைந்து விட்டதாக நேற்றுக் காலை முதலே சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வரத்தொடங்கின.

இது தொடர்பாக எஸ்.ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா கூறுகையில், தனது தாயார் உடல்நலத்துடன் இருப்பதாகவும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அறிந்த திரையுலகினரும் ரசிகர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மேலும், ஜானகி உடல்நலன் குறித்து இசையமைப்பாளர் தீனாவும் விளக்கமளித்துள்ளார். ஜானகியுடன், பாடகர் எஸ்.பி.பி தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது ஜானகி சிரித்து மகிழ்ச்சியாகப் பேசியதாகவும், எனது உடல்நலன் குறித்து இதுவரை 6 முறை வதந்திகள் பரவிவிட்டன எனவும் அவர் எஸ்.பி.பியிடம் பேசியதாக இசையமைப்பாளர் தீனா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *