சுல்தான் அமினா மருத்துவமனை வார்ட்டில் தீச்சம்பவம் : உயிருடற்சேதம் இல்லை

 

ஜோகூர்பாரு, ஜூன் 28:

சுல்தான் அமினா மருத்துவமனை, பெண்கள் வார்ட்டில் ஏற்பட்ட திடீர் தீச்சம்பவத்தில் எந்தவொரு உயிருடற்சேதமும் நிகழவில்லை என சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

முற்பகல் 3.00 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீச்சம்பவத்தில் பெண்கள் பிரிவு கட்டடத்தில் 52 நோயாளிகளும் அவர்களில் 24 பேர் தீச்சம்பவம் ஏற்பட்ட வார்ட்டிலும் இருந்தனர். பாதுகாப்பு, மீட்புப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கையினால் இவர்கள் அனைவரும் எந்தவொரு அசம்பாவிதங்களுமின்றி உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.

காப்பாற்றப்பட்ட நோயாளிகளில் 42 பேர் இங்குள்ள மற்றொரு பெண்கள் பிரிவு கட்டடத்திற்கு மாற்றப்பட்ட வேளையில் மேலும் 10 பேர் அருகிலுள்ள பெர்மாய் மருத்துவமனையின் கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டனர் என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது டத்தோஶ்ரீ டாக்டர் அடாம் கூறினார்.

இன்று இங்கு நிகழ்ந்த இத்தீச்சம்பவத்திற்கும் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிகழ்ந்த தீச்சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. காரணம், இச்சம்பவம் வேறொரு கட்டடத்தில் நிகழ்ந்துள்ளது.

அதோடு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது போல், எவ்வித உயிரிழப்புச் சம்பவங்களும் நிகழ்வில்லை என்பதைக் குறிப்பிட்ட அவர், இந்தக் கட்டடம் தற்காலிகமாக மூடப்படும் எனவும் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *