கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான நிர்வாகக் கோவில்கள் ஜூலை 1இல் திறக்கப்படும்: விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்

 

பத்துமலை, ஜூன் 29:

கோலாலம்பூர், ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்துக் கோவில்களும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வழிபாட்டிற்குத் திறக்கப்படும் என அதன் தலைவர் டான்ஶ்ரீ ஆர்.நடராஜா ஒரு காணொளி பதிவின் வழி அறிவித்தார்.

 

டான்ஶ்ரீ ஆர். நடராஜா

தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு வரையறுத்துள்ள நிலையான இயக்க நடைமுறையை (எஸ்.ஒ.பி) பின்பற்றியே தேவஸ்தான நிர்வாகத்திற்குக் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில்களும் திறக்கப்படுகிறது என்றார் அவர்.

கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் கோவில், ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில், பத்துமலை வளாகத்தில் அமைந்துள்ள ஶ்ரீ கணேசர் கோவில், ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், ஶ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில், ஶ்ரீ அலமேலு மங்கா சமேத ஶ்ரீ வெங்கடாஜலபதி கோவில், ஶ்ரீ ஆஞ்சநேயர் கோவில், ஶ்ரீ சனீஸ்வரர் கோவில், மேற்குகையில் அமைந்துள்ள ஶ்ரீ வேலாயுதர் கோவில், ஶ்ரீ வள்ளி தெய்வானை முருகன் கோவில் ஆகிய கோவில்கள் முறையே நாளை திறக்கப்படும்.


கொவிட் 19 பெருந்தொற்றைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வழிபாட்டிற்கு மூடப்பட்டன. அதன் பின்னர், நடைமுறைப்படுத்தப்பட்ட எஸ்ஓபிக்கும் பின்னர் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லலாம் என அரசாங்கம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் கீழே வழங்கப்படும் விதிமுறைகளை அனுசரித்தல் வேண்டும்.

* கை, கால்களைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

* கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

* உடல்நிலை வெப்பத்தை சோதிக்கப்பட்ட வெப்பநிலை 37.5 செல்சியஸ் அளவுக்கு உட்பட்டிருத்தல் அவசியம்.

* பக்தர்கள் பெயர், தொலைபேசி எண், உடல் வெப்பநிலை, முகவரி, நேரம் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் பக்தர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

* ஒவ்வொரு பக்தர்களும் 1 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.

 

மேற்குகைக்குச் செல்லும் வழி

* 70 வயதிற்கு மேல், 12 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். (ஆலய அர்ச்சகர்கள், பண்டாரங்கள் ஆகியோரைத் தவிர்த்து)

* மலேசியர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கண்டிப்பாக அடையாள அட்டையை உடன் எடுத்துவர வேண்டும்.

* காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

* மூச்சுத் திணறல், இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இருதய நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்கள் ஆலய வளாகத்திற்கு வருவது வரவேற்கப்படமாட்டாது.

* பிரசாதங்கள் பொட்டலங்களில் மட்டுமே வழங்கப்படும். பூஜைக்குப் பின்னர் பிரசாதப் பொருள்களை ஆலயத்தின் உள்ளேயோ, வெளியிலோ வைத்து உண்ண முடியாது.

கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் கோவிலில் டத்தோ சிவகுமாருடன், குருக்கள், உதவியாளர்கள் ஆகியோர்

* இறைவழிபாட்டிற்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் மட்டுமே ஆலயங்கள் திறந்திருக்கும். பக்தர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தைக் கவனத்தில் கொண்டு வழிபாடுகளை மேற்கொள்ளவும்.

* வழிபாட்டிற்கு எனக் குறிப்பிடப்பட்ட கோடுகளில் மட்டுமே நின்று பக்தர்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

* ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* வழிபாட்டிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது, ஆலய நிர்வாகத்தினர் தீர்மானித்த முடிவின்படியே அனுமதிக்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் உட்பட்டே கோவில்களுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். எனவே, பக்தர்கள் அனைத்து விதிமுறைகளையும் தெரிந்து கோவிலுக்கு வர வேண்டும் என கோலாலம்பூர், ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவரும் அறங்காவலருமான டான்ஶ்ரீ டத்தோ ஆர். நடராஜா வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *