அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை ஏற்பாடுகள் தீவிரம்

அடிக்கல் நாட்டு விழாவுக்கான சடங்குகள், 3ஆம் தேதி துவங்குகின்றன. இதற்காக வாரணாசியிலிருந்து வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அயோத்தி, ஆக.2-

அயோத்தியில், வரும் 5ஆம் தேதி நடக்கவுள்ள ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. விழாவில் பங்கேற்க, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது.

கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 5ஆம் தேதி காலை நடக்கிறது.

இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார். விழா ஏற்பாடுகள் பற்றி, அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால் தாஸ் கூறியதாவது:

அடிக்கல் நாட்டு விழாவுக்கான சடங்குகள், 3ஆம் தேதி துவங்குகின்றன. இதற்காக வாரணாசியிலிருந்து வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கங்கை, யமுனை, காவிரி உட்பட நாட்டின் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து, தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ராமேஸ்வரம், வாரணாசி, உட்பட பல இடங்களில் இருந்து, மண்ணும் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை, அடிக்கல் நாட்டு விழாவில் பயன்படுத்தப்படும்.

பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யாநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், பல்வேறு மாநில முதல்வர்கள் என, 200 வி.ஐ.பி.,க்கள், விழாவில் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை பார்வையிட, யோகி ஆதித்யநாத், அயோத்திக்கு இன்று வருகிறார்.

அடிக்கல் நாட்டு விழாவையொட்டி, உ.பி., மாநிலம் முழுவதும், கோவில்களில், 4 மற்றும் 5ம் தேதிகளில் சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத்சார்பில், வாரணாசி, மதுரா, சித்ரகூடம், பிரயாக்ராஜ், கோர்காபூர், நைமிசாரண்யம் உட்பட பல இடங்களில், ராமாயண உபன்யாசங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆக., 4 மற்றும் 5ஆம் தேதி, உ.பி., முழுதும், தீபாவளி கொண்டாட்டம் போல் காட்சியளிக்கும், வீடுகளில் மக்கள் அகல் விளக்குகளை ஏற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

அடிக்கல் நாட்டு விழாவை சீர்குலைக்கும் வகையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவுத்துறை எச்சரித்துள்ளதால், அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது பற்றி, அயோத்தி மாவட்ட எஸ்.பி., கூறியதாவது:

அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு இடத்தில், ஐந்து பேருக்கு மேல் யாரும் கூடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *