சிங்கப்பூரில் இன்று 246 பேருக்கு நோய்த்தொற்று

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,907ஆக உயர்ந்துள்ளது.

ஜூரோங், ஜூன் 30-

சிங்கப்பூரில் இன்று (ஜூன் 30) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 246 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43,907ஆக உயர்ந்துள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் அறுவர் உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; இதர மூவர் வேலை அனுமதிச் சீட்டுடன் இருப்பவர்கள்.

தொற்றுக்கு ஆளான மாற்றவர்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர். இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

கேலாங்கில் உள்ள டுரியான் விற்பனைக் கடை, தோ பாயோவில் உள்ள ஒரு ஸ்பா, புக்கிட் பாத்தோக்கில் உள்ள தாய்லாந்து உணவகம் ஆகியவற்றுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

முஸ்தஃபா நிலையம், காஸ்வே பாயின்ட், நியூ வோர்ல்ட் சென்டரில் இருக்கும் ஷெங் சியோங் ஆகிய இடங்களுக்கும் கிருமித்தொற்று கண்டவர்கள் சென்று வந்ததாக அமைச்சு தெரிவித்தது.

எண் 38 உட்லாண்ட்ஸ் தொழிற்பூங்கா E1, 201 உட்லாண்ட்ஸ் தொழிற்பூங்கா E5, 170 உட்லாண்ட்ஸ் தொழிற்பூங்கா E7 முகவரிகளில் மூன்று புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 7ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.

ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 4ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2ஆக இருந்தது.

நேற்று மேலும் 477 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 37,973 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *