இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு! மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய ஆயத்தம்

புதுடெல்லி, ஜூலை 1-

இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் என உலகமெங்கும் 120 தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சோதனைகள், பல்வேறு கட்டங்களில் உள்ளது. இந்தியாவில் 6 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் இந்தியாவில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு ‘கோவேக்சின்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கப்பட்டுள்ளது. அந்த சோதனையில், இது பாதுகாப்பானது மற்றும் சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொரோனா வைரசின் திரிபுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படி கொரோனா வைரஸ் திரிபுகளில் இருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்ப்பதற்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் ஒப்புதலை வழங்கி உள்ளனர்.

இந்த தடுப்பூசியை இந்தியாவின் தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியை இந்த மாதம் மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்க்க ஏற்பாடு ஆகி உள்ளது.

எனவே இந்த ஆண்டில் எப்படியும் கொரோனா தடுப்பூசி, சந்தையில் விற்பனைக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *