ஜூலையில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரபரப்பான மாதமாக இருக்கும்!

இந்த ஜூலை மாதம், பெற்றோர்களுக்கு முந்தைய வழக்கமான, ஒரு பரபரப்பான அட்டவணைக்குள் செல்லும் மாதமாக அமையவிருக்கிறது.

கோலாலம்பூர், ஜூலை 2-

கொவிட்19 பெருந்தொற்றின் கோரத் தாண்டவத்தால், கடந்த நான்கு மாதங்களாக பள்ளி வாசலை அடியெடுத்து வைக்காத மாணவர்கள், இம்மாத இடையில் மீண்டும் பள்ளிக்குச் செல்லவிருக்கிறார்கள்.

மலேசிய கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ரட்ஸி மாட் ஜிடின், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை நேற்று அறிவிப்பதற்காக, சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தருணம், நாட்டு மக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த படிவம் 1 முதல் படிவம் 4 மாணவர்களும், புகுமுக வகுப்பு மாணவர்களும், ஆரம்பப் பள்ளிகளின் 5 மற்றும் 6ஆம் ஆண்டு மாணவர்களும் இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து பள்ளிக்குச் செல்லலாம்.

ஆரம்பப்பள்ளியைச் சேர்ந்த 1ஆம் ஆண்டு முதல் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூலை 22ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.

கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின்.

மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்) தீவிர பரிசீலனைக்குப் பிறகே, அரசாங்கப் பொதுத் தேர்வுகள் இல்லாத வகுப்பு மாணவர்களுக்காகப், பள்ளிகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தகவலையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த ஜூலை மாதமானது, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டும் பரபரப்பான மாதம் அல்ல; பெற்றோர்களும்தான்! கடந்த மார்ச் 18ஆம் தேதியிலிருந்து, பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி வீட்டிலிருந்த மாணவர்களும், இப்போது பள்ளிகளுக்குச் செல்லவிருக்கின்றனர். பெற்றோர்கள், தங்களின் அன்றாட நடவடிக்கை அட்டவணையை சீர் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இந்த ஜூலை மாதம், பெற்றோர்களுக்கு முந்தைய வழக்கமான ஒரு பரபரப்பான அட்டவணைக்குள் செல்லும் மாதமாக அமையவிருக்கிறது.

இதற்கிடையில், எஸ்.பி.எம், எஸ்.வி.எம், எஸ்.டி.பி.எம் மற்றும் எஸ்.டி.ஏ.எம். ஆகிய அரசாங்கப் பொதுத் தேர்வுகளில் அமர்கின்ற மாணவர்கள், பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கி நேற்றோடு ஒரு வாரம் ஆகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்றொரு நிலவரத்தில், ஜூலை 1ஆம் தேதியான நேற்று முதல் பாலர்ப் பள்ளிகளும், மழலையர் பள்ளிகளும் திறக்கப்பட்டிருப்பதும் அனைவரின் பார்வையை, குறிப்பாக ஊடகத்தினரின் பார்வையை கவர்ந்திருந்தது.

அப்பள்ளிகளில், நிலையான இயக்க நடைமுறை (எஸ்.ஒ.பி) கடைபிடிக்கப்படுகிறதா என்பதை நேரில் கண்டறிய, ஊடகங்கள் ஆர்வம் காட்டியிருந்தன. ஊடகத்தினரின் நேரடித் தகவலின் படி, பெரும்பான்மை பள்ளிகளிலும் எஸ்.ஒ.பி. கடைபிடிக்கப்படுகிறது என்பது ஊர்ஜிதமானது.

அடுத்த 28 நாட்களுக்கு தொற்றுப் பரவலை சுழியமாக நிலைநிறுத்த இலக்கு!

இதனிடையே, சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பும் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.

நாட்டில் முதல் முறையாக, நேற்று கொவிட்19 தொற்றுப் பரவல் சம்பவம் இல்லை. உள்நாட்டினரும் வெளிநாட்டினரும் தொற்றினால் பாதிப்படையவில்லை. முதல்முறையாக சுழியம் சம்பவத்தை நாடு பதிவு செய்திருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

நாட்டில் தொடர்ந்து 28 நாட்களுக்கு, புதிய பெருந்தொற்றுப் பரவல் எண்ணிக்கையை சுழியமாக நிலைநிறுத்த சுகாதார அமைச்சு இலக்கு  கொண்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

“இது ஒரு நல்ல தொடக்கமாகும். எனினும், தொடர்ந்து 28 நாட்களுக்கு புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதே முக்கியமாகும். மக்கள் அனைவரும் எஸ்.ஒ.பி. எனப்படும் செயல்பாட்டு தர விதிமுறையை முழுமையாகப் பின்பற்றினால் இது சாத்தியமாகும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நம்மால் கொவிட்19 பெருந்தொற்றின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியுமா?

முடியும் என்பதே நமது நம்பிக்கை! நாம் அனைவரும் பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, புதிய வழமைக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். கட்டாயமாக நிலையான இயக்க முறைமையை (எஸ்.ஒ.பி) உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். தொடுதல் இடைவெளி, பொது சுகாதார பராமரிப்பு ஆகிய அம்சங்களை கடைபிடிக்கும் அதே வேளையில், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் செல்வதையும் பிறருக்கு மிக அருகாமையில் இருந்து பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

இத்தகைய சுய கட்டொழுங்கினால், நாம் அனைவரும் கொவிட்19 பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்று நம்பிக்கை கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *