கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இமானுவேல் ராஜ் மரணம்; விக்னேஸ் உடல் கிடைக்கவில்லை!

21 வயதான எஸ்.இமானுவேல் ராஜ், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.55 மணியளவில், உயிரற்ற நிலையில் கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டார்.

லுமூட், ஜூன் 29-

தெலுக் பாத்தேக் கடற்கரையில் குளிக்கச் சென்ற இந்திய நண்பர்கள் இருவர், கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

21 வயதான எஸ்.இமானுவேல் ராஜ், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.55 மணியளவில், உயிரற்ற நிலையில் கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டார். அவரின் நண்பர் ஆர்.விக்னேஸ் (வயது 22) இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இவ்விரு நண்பர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் கடற்கரைக்குக் குளிக்க வந்ததாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தங்களுக்கு மாலை 6.09 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக மஞ்சோங் மாவட்ட தீயணைப்பு நிலையத்தின் செயல்முறை தலைவரும், மீட்புப் பணிக் குழுவின் இரண்டாம் நிலை உயர் அதிகாரியுமான அப்துல் ஹஸார் தெரிவித்தார்.

முதலாவதாக மீட்கப்பட்ட இமானுவேலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மாலை 7.20 மணிக்கு உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போன இன்னொரு இளைஞர் குளித்த பகுதியை ஒட்டி, கிட்டத்தட்ட 50 மீட்டர் பரப்பளவில் அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

மீட்கப்பட்ட இமானுவேல் உடல், அடுத்தக் கட்ட நடவடிக்கைகாக போலீஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தாங்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய அலை வந்து அவ்விருவரையும் இழுத்துச் சென்று விட்டதாக எஸ்.ரிஷேதிரபாலன் (வயது 22) கூறினார்.

“சம்பவத்தின் போது என்னால் ஒரு நண்பரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. அதற்குள் நானும் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, சோர்வடைந்து விட்டேன். இன்னும் இரு நண்பர்கள் கடற்கரைக்கு நீந்தி தப்பித்து விட்டனர்” என்று அவர் மேலும் சொன்னார்.

“எங்களின் இரு நண்பர்களைத்தான் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது!” என அவர் கவலையோடு கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *