பேரா இந்தியர்கள் எதிர்நோக்கும் விவகாரங்களில் நேரடியாக கவனம் செலுத்துவேன்

ஈப்போ, ஜூலை 1-
பேரா மாநிலத்தில் இந்தியரின் விவகாரங்களை கவனிக்க தாம் முழு பொறுப்பினை ஏற்கப் போவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஃபைசால் கூறினார்.

இம்மாநிலத்தில் இந்தியர் விவகாரங்கள் மீது நேரடிக் கவனம் செலுத்த பிரதிநிதிகள் இல்லா குறை இதன்வழி தீர்வு காணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியர் விவகாரங்களை கவனிக்க பிரதிநிதிகள் இல்லை எனும் குறைபாடுகள் நிலவி வந்தது. இந்தியர்கள் நலன்கள் கண்டிப்பாகக் காக்கப்படும். அவர்களின் மேம்பாட்டிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அவர் உறுதி கூறினார்.

கடந்த ஆட்சியின் போது இந்தியர் விவகாரங்களை கவனிக்க இந்திய பிரதிநிதிகள் இருந்தனர். இன்று அந்த பொறுப்பில் பிரதிநிதிகள் இல்லாதது குறித்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இம்மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் பிரிவு தம்முடைய கவனத்தின் கீழ் செயல்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் கிராம தலைவர்கள் விவகாரம் விரைவில் தீர்க்கப்படும். கடந்த காலங்களில் ஏழு இந்தியர்கள் கிராமத் தலைவர்களாக பொறுப்புகள் வகித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராம மேம்பாட்டு அமைச்சரின் கீழ் கிராமத் தலைவருக்கான நிர்வாக விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நியமனங்கள் தாமதமாகின்றன என்று மந்திரி பெசார் தெரிவித்தார்.

தற்போது கிராமத் தலைவரை கிராம முகாமைத்துவ தற்காலிக குழு (ஜே.எஸ்.பி.கே) கையகப்படுத்துகிறது. இது தேசியக் கூட்டணியில் 3 கட்சி பிரதிநிதியாக உள்ளது.

கடந்த காலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று பேரா மாநில வேளாண்மை மேம்பாட்டு கழக அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் திட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், டத்தோஸ்ரீ அஹ்மாட் ஃபைசால் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே, மாநிலத்தில் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுள்ள தகவலையும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *