முழு ஊரடங்கு அமலாக்கத்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன – பிரதமர் மோடி உரை

இந்திய பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜூன் 30-

இந்திய பிரதமர் மோடி, இன்று மாலை 4 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “பொதுமுடக்கத்தின் 2ஆம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கிவிட்டது. கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை. இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. பிற நாடுகளுடம் ஒப்பிடும் போது நமது நாடு கொரோனாவை சிறப்பாக எதிர் கொண்டுள்ளது.

பிரதமர் முதல் சாமனியர் வரை நமது நாட்டில் ஒரே விதிமுறைதான். இந்தியா முழுவதும் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டும். அரிசி கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.

இலவச பொருட்களுக்காக அரசுக்கு கூடுதலாக 90 ஆயிரம் கோடி செலவாகும். நாட்டின் பொருளாதார சூழலை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மேலும் “கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். ஊராட்சி தலைவரோ, பிரதமரோ விதிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டும். வேளாண் துறையிலும் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *