சினி இடைத்தேர்தல்: நாளை 18 போலீஸ்காரர்கள் முன்கூட்டியே வாக்களிப்பர்!

காலை 8 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரையில் முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும்.

சினி, ஜூன் 29-

சினி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலை ஒட்டி, நாளை அங்குள்ள போலீஸ் நிலையத்தின் தகவல் அறையில், 18 போலீஸ்காரர்கள் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர்.

தேர்தல் பொறுப்பாண்மைக் குழு (எஸ்.பி.ஆர்) வெளியிட்டுள்ள ஓர்  அறிக்கையில், காலை 8 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரையில் முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் உட்பட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் கொவிட்19 நோய்த்தொற்றைத் தடுக்கும் வழிமுறைக்ளிய அவசியம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக தொடுகை இடைவெளியைக் கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி திரவத்தை கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல், கையுறை அணிதல், உடல் உஷ்ணப் பரிசோதனை மேற்கொள்தல் போன்ற வழிமுறைகளிய கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எஸ்.பி.ஆர். வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வாக்களிப்பு நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களை, எஸ்.பி.ஆரின் முகநூலிலும், தேர்தல் கழகத்தின் வழியாகவும் கண்டறியலாம். வேட்பாளரின் முகவர்கள் மற்றும் எஸ்.பி.ஆரால் நியமிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில், இந்த முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெறும்.

முன்கூட்டிய வாக்களிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சினி போலீஸ் நிலையத்தில் வைக்கப்படும். பின்னர் சினி இடைத்தேர்தல் நாளான ஜூலை 4-ஆம் தேதியன்று, பலோ ஹினாய் போலீஸ் நிலையத்தின் தகவல் அறையில் வாக்குகள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *