நூறாண்டு பழமையான மரம் வீட்டின் மீது சாய்ந்தது; அதிர்ஷ்டவசமாக தப்பினார் திருமதி மல்லிகா!

தனது குடும்பம் செழித்து வளர்ந்த வீடு தன் கண் முன்னே சுக்குநூறாகக் கிடப்பதைக் கண்டு மனவேதனையடைந்துள்ளார் இந்திய மாது மல்லிகா..

ரவூப், ஆக.2-

நூறாண்டுகள் பழமையான மரம் ஒன்று, சிற்றுண்டி வியாபாரியின் வீட்டின் மீது சாய்ந்ததில், அப்பலகை வீடு முற்றாகச் சேதமுற்றது. அதிகாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், சு.மல்லிகா (வயது 53) அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

ரவூப் – ஜே.கே.ஆர். ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் சிற்றுண்டி கடை வைத்திருக்கும் அவர், வழக்கம் போல் சிற்றுண்டி தயாரிக்க துயில் எழுந்து வீட்டின் அடுப்பறைக்குச் சென்ற போது, வீட்டின் முற்பகுதியில் அந்த மரம் சாய்ந்தது.

வீட்டின் கூரைகளும், வீட்டை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த மரச்சட்டங்களும் உடைந்து விழும் சத்தம் கேட்டு அலறியடித்து வெளியே ஓடி வந்த அவர், தனது குடும்பம் செழித்து வளர்ந்த வீடு தன் கண் முன்னே சுக்குநூறாகக் கிடப்பதைக் கண்டு மனவேதனையடைந்துள்ளார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான அவ்வீடு, அவரின் சிற்றுண்டி கடைக்குப் பின்பகுதியில், பள்ளத்தில் அமைந்திருக்கின்றது. சம்பவத்தின் போது, அவர் தனியாகத்தான் அவ்வீட்டில் இருந்துள்ளார்.

வழக்கமாக அவரின் மகனும் இரு பேரப்பிள்ளைகளும் வீட்டில் இருப்பார்களாம். சம்பவத்தன்று அவர்கள் இன்னொரு மகன் வீட்டில் இருந்ததாக அவர் கூறினார்.

“விடுமுறைக்கு என் பிள்ளைகள் அனைவரும் வீட்டிற்கு வருவதாக இருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால், அவர்கள் வேறு ஒரு வாரத்தில் வீட்டிற்கு வர முடிவு செய்திருந்தனர். நல்ல வேளை, அவர்கள் வரவில்லை. அனைவரும் வந்திருந்தால், நிச்சயமாக வீட்டின் முற்றத்தில்தான் அனைவரும் உறங்கியிருப்போம். இதனை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அந்த முனிஸ்வரர் ஐயாதான் எங்களை காப்பாற்றியிருக்கிறார்” என்று அவர் வேதனை தாளாது குறிப்பிட்டார்.

தொகுதி மஇகாவும் சட்டமன்ற உறுப்பினரும் களம் இறங்கினர்!

இதனிடையே, சம்பவம் குறித்து கேள்வியுற்ற மஇகா ரவூப் தொகுதி தலைவர் டத்தோ க.முனியாண்டி, உடனடியாக பத்து தலாம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் அஸிஸ் மாட் கிராமுக்கு தகவல் தெரிவித்தார்.

அவரை நேரடியாகச் சந்தித்து சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த டத்தோ முனியாண்டி, மல்லிகாவுக்கு மாற்று நிலம் வழங்குவதற்கும் தற்காலத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் வலியுறுத்தினார்.

மல்லிகாவுக்கு ஆறுதல் கூறிய டத்தோ அப்துல் அஸிஸ், அவருக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், அக்கனமே ரவூப் மாவட்ட மன்றத்தின் செயலாளர் முகமட் பவுசி பின் ஹாஜி அபு ஹுஸாய்னியை தொலைபேசி வழி அழைத்து சம்பவ இடத்திற்கு வரச் சொன்னார்.

அடுத்த சில நிமிடங்களில் தலத்திற்கு வந்தடைந்த செயலாளரை, வீட்டைச் சேதப்படுத்தியிருக்கும் மரத்தை அப்புறப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதோடு, அவ்வீட்டின் நில விவரத்தை ஆய்வு செய்து, அம்மாதுவுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பது குறித்து வழிகோலுமாறும் டத்தோ அப்துல் அஸிஸ் கேட்டுக் கொண்டார்.

தொகுதித் தலைவர்களின் பண உதவி!

மற்றொரு நிலவரத்தில், உடைந்த வீடு சீர் செய்யப்படும் வரை, தனது மகன் வீட்டில் தங்கியிருக்கும் மாதுவுக்கு பண உதவி வழங்க முன்வந்தனர் தொகுதித் தலைவர்கள்!

மஇகா பகாங் மாநில துணைத் தலைவருமான டத்தோ முனியாண்டி உட்பட, மஇகா ரவூப் தொகுதியின் உதவித் தலைவரும் ரவூப் இந்து ஆலய சபா தலைவருமான டத்தோ க.தமிழ்ச்செல்வன், மஇகா தாமான் கெனாங்கா கிளைத் தலைவரும் மலேசிய இந்திய இளைஞர் மேம்பாட்டு மன்றத்தின் (MIYDF) பகாங் மாநிலத் தலைவருமான ஆனந்தசெல்வம் ஆகியோர், மல்லிகாவுக்கு கணிசமான பண உதவி வழங்கியதோடு, அவரின் வீட்டுப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வழிவகுப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *