சென்னையில் முழு ஊரடங்கை மீறியதாக 2,436 பேர் மீது அதிரடி வழக்கு: 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

வடசென்னை பகுதியில் தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜூன் 20- 

சென்னையில் முழு ஊரடங்கை மீறியதாக முதல் நாளில் 2,436 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முழு ஊரடங்கையொட்டி எங்கள் வேண்டுகோளை ஏற்று நடந்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பொதுமக்கள் நடந்து சென்று ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்தது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. மீதி உள்ள ஊரடங்கு நாட்களுக்கும் பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகிறேன்.

ஊரடங்கு தொடங்கிய முதல் நாளில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,436 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1,886 இரு சக்கரவாகனங்கள், 67 மூன்று சக்கர வாகனங்கள், 47 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், முககவசம் அணியாதவர்கள் என 989 பேர் மீது தனியாக வழக்கு போடப்பட்டுள்ளது.

வடசென்னையில் அதிக வழக்கு

வடசென்னை பகுதியில் தான் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடசென்னையில் அதிக காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை அமைந்தகரை பகுதியில் நேற்று மாலை அவர், ஊரடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது கூடுதல் கமிஷனர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர்கள் முத்துசாமி, அசோக்குமார் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

வாகனங்கள் ஒப்படைப்பது எப்போது?

ஊரடங்கு தொடங்கிய நேற்று முதல் நாளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பிறகு, ஜூலை-1 ந் தேதியில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *