சினி சட்டமன்ற இடைத்தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பு இன்று காலை தொடங்கியது

அத்தொகுதியைச் சேர்ந்த 18 போலீஸ் உறுப்பினர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் தங்களின் கடமையை நிறைவேற்றினர்.

குவாந்தான், ஜூன் 30-

சினி சட்டமன்ற இடைத்தேர்தலின் முன்கூட்டிய வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

அத்தொகுதியைச் சேர்ந்த 18 போலீஸ் உறுப்பினர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் தங்களின் கடமையை நிறைவேற்றினர்.

இந்த வாக்களிப்பின்போது, கொவிட்19 நோய்த் தடுப்பு வழிகாட்டுத்தல்களான, தொடுகை இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி திரவியம் பயன்படுத்துவது மற்றும் உடல் உஷ்ண பரிசோதனை மேற்கொள்ளவது போன்றவை பின்பற்றப்பட்டன.

இதற்கிடையில், தேர்தல் பொறுப்பாண்மைக் குழு (எஸ்.பி.ஆர்) நியமித்துள்ள முகவர்களும் தேர்தல் கண்காணிப்பாளர்களும், வாக்களிப்பு நடவடிக்கையை  பார்வையிட்டனர்.

அதோடு, வாக்களிப்பு நடைபெறுவதை, எஸ்.பி.ஆர்- இன் முகநூலிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

முன்கூட்டிய வாக்களிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சினி போலீஸ் நிலையத்தில் வைக்கப்படும். பின்னர், சினி இடைத்தேர்தல் நாளான ஜூலை 4ஆம் தேதி, பாலோ ஹினாய் போலீஸ் நிலையத்தின் தகவல் அறையில் வாக்குகள் கணக்கிடப்படும்.

ஜூலை 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சினி சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில், தேசிய முன்னணியைச் சேர்ந்த முஹமட் ஷரிம் மற்றும் 2 சுயேட்சை வேட்பாளர்களான தெங்கு சைனுள் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும் முஹமட் ஷுக்ரி முஹமட் ரம்லி ஆகியோரிடையே, மும்முனைப் போட்டி நிலவுகிறது.

சினி சட்டமன்ற உறுப்பினர், டத்தோ ஶ்ரீ அபு பாக்கார் ஹருண், இருதய நோய் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *